கணவன் தன் வாழ்க்கைத் துணைவியுடன் கங்கா ஸ்நானத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறான். வழியில் ஒரு பெண் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கிறாள். வாழ்க்கைத் துணைவி அந்த ஆடல் பாடலில் லயித்துத் தன் நாயகனையும் பிரயாண நோக்கத்தையும் மறந்து நிற்கிறாள். எனவே தாமதித்துப் போகிறாள். கணவனையும் கோபித்துக் கொள்கிறாள், ’நான் வருமுன் கங்கா ஸ்நானம் செய்து விட்டீர்களே’ என்று. கணவனோ இளநகையரும்பி, ’தேவியே! உன் விளையாட்டே உனக்குப் பெரிதா யிருக்கிறது. பாட்டிலும் கூத்திலும் நீ உன்னை மறந்து, கொலு வைத்த மாதிரி அங்கே நின்று விட்டாய். என்மீதும் கோபம் கொள்கிறாய். நான் உனக்கு ஒரு சாபம் கொடுக்கப் போகிறேன்’ என்றான். சாபம் என்றதும் மின்னல் போல் துடித்த மேனி சாபத்தை அறிந்து கொண்டதும் ஆனந்தத்தில் பூரிக்கிறது. ‘நீ பூலோகத்தில் போய்க் கவிஞர் நாவில், உழவர் கைகளில், மகான்கள் நெஞ்சில் கொலு வீற்றிருக்க வேண்டும்’என்பது தான் சாபம்! சாபமா, அனுக்கிரகமா? இது புராணம்
.ஆற்றங்கரை மண்டபம் ஒன்றில் மாலை இளந்தென்றலை அனுபவித்த வண்ணம் தாமும் தனிமையுமாக இருக்கும் போது கலைமகளே தோன்றிக் கன்னிக்கவிதை கொணர்ந்து தமக்குத் தந்ததாகப் பாரதியார் பாடியிருக்கிறாரல்லவா? மணமாலையும் கையுமாகத் தோன்றிய கலைமகள் தம்மை நோக்கி, ‘இளம் புன்னகை பூத்து மறைந்து விட்டாளம்மா!’என்று அதிசயப்படுகிறார். அந்த ’இளம் புன்னகை’ மட்டுமா பாரதியாரின் அதிசயக் கவிதை? துர்க்கா தேவியின் வித்தியாச ரூபமும், சிம்ம கர்ஜனையும் சிரிப்பும் சேர்ந்த்து தானே பாரதியாரின் ஆவேச கீதம்?
இத்தேவியின் பளிங்கு போலக் களங்கமற்ற வெண்ணிறமும், வெள்ளைக் கலையும், வெண்ணிற நகைகளும், வெண்முத்துக் குடையும், வெண்தாமரையும், ‘தூய்மையும் அறிவும் கள்ளங்கவடற்ற குழந்தை உள்ளமும் வீற்றிருக்குமிடத்தில் நாம் கொலு வீற்றிருப்போம்’ என்ற கலைமகளின் குறிப்பிற்கு அறிகுறியாகும். கோயிலும் பீடமும் மட்டுமா தாமரை? கண்ணும் முகமும் கையும் காலும் தாமரையாம் கவிதைத் தெய்வத்திற்கு. நம்மவரின் தாமரை மோகமும் அறிவு மோகமும் அப்படி!
ஒரு கையில் ஏடும் எழுத்தாணியும், மற்றொன்றில் ஜபமாலையும், அறிவுக்கும் பக்திக்கும் உள்ள தொடர்பு. வேறு இரண்டு கைகளில் வீணை, இசைக் கருவிகளுக்கெல்லம், சங்கீதம் முதலான கலகளுக்கெல்லாம் அறிகுறியாக. அறிவைப் போல் பக்தி; இரண்டும் சேர்ந்த அளவிற்குக் கலைக் காதல். இந்த கல்விப் பயிற்சிக்குக் கல்வித் தெய்வமும் கரைகாணவில்லையாம் – நேற்றும் இன்றும் நாளையுந்தான். பாடிக்கொண்டே ஆடிக்கொண்டிருப்பதாகவும் ஒரு ஐதீகம்.
இத்தகைய சரஸ்வதியை நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் கொலு வைத்து பூசிப்பது போதுமா? அறிவுக் கொலு உள்ளத்திலே ஆண்டாண்டு தோறும் நிகழவேண்டிய ஒரு வைபவம்.
'புத்தகத்(து) உள்ளுறை மாதே!' என்று, புஸ்தகங்களை வருஷத்திற்கொரு நாள் வரிசையாக அழகாக அடுக்கி வைத்துக் கலைமகளின் படத்தையும் தூக்கி வைத்து மலர்தூவி மந்திரம் ஜபித்தால் போதுமா? புஸ்தகங்களுக்குள்ளேதான் அறிவு அடங்கிக் கிடக்கிறதென்று எப்போதும் படித்துக் கொண்டிருந்தால் போதுமா?
பூவில் அமர்ந்துறை வாழ்வே! என்று போற்றப் பெறும் தேவி இதயப் பூவிலும் வாழவேண்டுமென்றால் நமது அறிவுத்திறனும் கலைத்திறனும் ஒருங்கே மலர்ச்சி பெற வேண்டும். அழகுணர்ச்சியுடனும், அருளுணர்ச்சியுடனும் அறிவு பரிமளிக்க வேண்டும். ஞானக் கொழுந்தாகிய ஸரஸ்வதியை, ‘வித்தகப் பெண்’ணாய்க் கற்பித்திருப்பதையும் நாம் மறந்துவிடலாகாது. ‘மாதர் தீங்குரல் பாட்டில்’ இருப்பவள் நம்மாதர் உள்ளத்திலும் கொலுவிருக்கும்போது நாம் ஸரஸ்வதி பூஜையை உள்ளபடியே கொண்டாடியவராவோம்!
இன்று ஸரஸ்வதி பூஜை. அனைவருக்கும் இனிய ஸரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள். இந்நாளில் உங்களுக்கு ஆனந்த விகடன் 1949 – ஆம் வருட தீபாவளி மலரில் வந்த ஒரு கட்டுரையை பொக்கிஷப் பகிர்வாக அளித்திருக்கிறேன்.[கூடுதல் தகவல்: ஓவியங்கள் சித்ரலேகா வரைந்தவை].
Source:http://thenkoodu.in/index.php/manage_blogs.phpblogid=36802&url=venkatnagaraj.blogspot.com/2012/10/blog-post_23.html